Pudumai
ISBN 9789358782066

Highlights

Notes

  

அத்தியாயம் 1: கால இயந்திரத்தின் அறிமுகம் . . .

இவை அனைத்தும் பேராசிரியர் ஆர்த்தியின் கால இயந்திரத்தில் தொடங்கியது. பிறந்தநாள்கள் எப்போதும் மகிழ்ச்சியான தருணங்கள். பல வித பலகாரங்களுடனும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடனும் ஒரே ஆரவாரம் தான்! ஜூலை 6, 2021 அன்று எனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக எனது பெற்றோர் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எல்லோரும் பரிசுகளுடன் வந்திருந்தார்கள், என் அம்மாவின் தோழி பேராசிரியர் ஆர்த்தி மட்டும் கைகளில் பரிசு ஏதுமில்லாமல் இருந்தார். எனக்குக் குழப்பமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

சரி, நான் எப்பொழுதும் பரிசுகள் தேடுவது இல்லை. ஆர்த்தி அத்தை (இனி இந்த கதை முழுதும் அத்தை என்றே அழைக்கப்படுவார்கள்) எப்போதும் என் எண்ணங்களையும் ஆர்வத்தையும் தூண்டும் பரிசுகளை கொண்டு வருவார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னைச் சந்திக்கும் போது அவர்களின் பிரத்யேகமான பரிசுகளுக்காக நான் எப்போதும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.

நிஜத்தில், நான் பரிசுகளைப் பாராட்டுவது மட்டுமல்லாமல், எனக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களின் விருப்பங்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆர்த்தி அத்தை எப்பவுமே ஸ்பெஷல் தான்.

என் பன்னிரண்டாவது பிறந்தநாளில் எனக்காக என் அம்மா ஒரு கவிதை எழுதியிருந்தார்கள். அத்தை அதை லேமினேட் செய்து எனக்கு தந்தார்கள். அது என் இதயத்தைத் தொட்டது, என் வாழ்நாள் முழுவதும் அதை நான் பொக்கிஷமாக வைத்திருப்பேன்.

சரி, வாருங்கள், என் பிறந்தநாள் கேளிக்கையில் ஈடுபடுவோம். பர்த்டே பார்ட்டிக்கு திரும்பி வர, கொண்டாட்டம் அதிகம். என் பெற்றோர் எனக்காக நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். எனது உறவினர்களின் அன்பளிப்பு மற்றும் வாழ்த்துக்களைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அனைத்து வகையான தின்பண்டங்கள், விளையாட்டுகள் மற்றும் இரவு உணவு முடிந்ததும், ஆர்த்தி அத்தை என் பெற்றோரிடம் பேசினார். அவர்களின் தீவிர உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உரையாடலுக்குப் பிறகு, அவர் என்னை அழைத்தார். என் பெற்றோரும், நானும் ஆர்த்தி அத்தையும் அவர்களது காரில் ஏறி அவர் வீட்டிற்குக் கிளம்பினோம்.

நான் மிகவும் ஆர்வத்துடன், “என்ன நடந்தது அத்தை?” என்று கேட்டேன்.

அவர் புன்னகையுடன் பதிலளித்தார், “காத்திரு குட்டி பையா, சீக்கிரம் ரகசியங்களை உடைப்போம்!!”

வழியெங்கும் ஆர்த்தி அத்தை கொண்டாட்டம் எப்படி இருந்தது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். என் பிறந்தநாளுக்கு அத்தை ‘நோ – கிஃப்ட்- என்ட்ரி’ செய்ததில் நானும் ஏமாற்றமடைந்தேன், அதனால் அமைதியற்ற நான் அத்தையிடம் சற்றே கோபமாய், “அப்படியா, அத்தை, என் பிறந்தநாளை மறந்துவிட்டீர்களா அல்லது என்னை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டேன்.

அத்தை சிரித்தார், “ஏன் குட்டி அப்படி சொல்றே?”

நான் தயக்கத்துடன் பதிலளித்தேன், “இல்லை, நான் உங்களிடமிருந்து பரிசை ஆவலுடன் எதிர்பார்த்தேன். என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் பரிசுகள் என் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.” அசடு வழிய நான் அத்தையிடம் சொன்னேன்.

அத்தை மர்மமாய் சிரித்தார்கள். எனக்குக் குழப்பம் தலைக்கேறியது. அத்தையின் புன்னகை விரிவடைந்து, வேகமாக காரை நிறுத்தி, பத்திரமாக வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்காகக் காத்திருந்தார்கள். பின் அவர்களின் வீட்டு கதவைத் திறந்து, எங்களை அடித்தளத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ஆர்த்தி அத்தை. என் பெற்றோர் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்ததால் நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

என் மனம் தந்தியடித்தது, “அத்தை வீட்டிற்கு இந்த வருகையின் நோக்கம் அவர்களுக்குத் தெரியுமா? எதை என்னிடம் மறைக்கிறார்கள்?”

சற்று நேரத்தில் கண்களில் மின்னலுடன் என்னைப் பார்த்து, “இதோ உன் பரிசு” என குதூகலித்தார்கள் அத்தை.

குளிர்சாதனப்பெட்டி அளவுள்ள ஒரு பெரிய பொருள், மென்மையான பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. எனக்கு மர்மம் தாங்கவில்லை.

என்ன நடக்கிறது என்று நான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆர்த்தி அத்தை பட்டுப்போன்ற துணியைக் அகற்றி குளிர்சாதன பெட்டி அளவில் ஒரு பொருளை காண்பித்தார்.

கண்களில் பெருமிதத்துடன், சிரித்துக்கொண்டே சொன்னார்கள், “குட்டி, இது என் மிகப்பெரிய சாதனை மற்றும் கண்டுபிடிப்பு கால இயந்திரம் எனப்படும் டைம் மெஷின். இதற்கு நான் இட்ட பெயர் - புதுமை*.”

அத்தைக்கு திடீர் என என்னமோ ஆகிவிட்டதோ என்று பயந்தேன். கலவரத்துடன் என் பெற்றோரைப் பார்த்தேன். என் பெற்றோரின் பார்வையிலிருந்து, அவர்களும் அப்படித்தான் உணர்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

“இது ஏதடா.. அத்தைக்கு என்ன ஆயிற்று?” கவலையான மனதுடன் நான் அத்தையைப் பார்த்தேன். ஆனாலும், அத்தையிடம் இருந்து அதிகம் கேட்க நாங்கள் பொறுமையாக இருந்தோம்.

அமைதியை அத்தையே அவர்களின் பேச்சால் தகர்த்தார்கள். “இப்போதெல்லாம் டைம் மெஷின் ஒரு அறிவியல் புனைகதை, ஆனால் நான், பேராசிரியர் ஆர்த்தி, அதை நிஜமாக்கினேன்! இதை சுமார் 10 ஆண்டுகளாக எனது மூளையையும் முழு மூச்சையும் கவனத்துடன் செலுத்தி உருவாக்க முற்பட்டேன், அதற்காக நான் ஆர்வத்துடன் உழைத்தேன்” என்றார்.

அத்தையின் பேச்சைக் கேட்கக் கேட்க என் கண்கள் விரிவடையத் தொடங்கின. இது ஒரு மாயாஜால அனுபவம் அல்லது 4D திரைப்படம் போல் தோன்றியது. இந்த நிகழ்வும் அப்படியே விரைவில் மாயைகளுடன் முடிவடையும் என்றே எண்ணினேன்.

என்னை உலுக்கிய அத்தை, “சர்வேஷ், உனது பிறந்தநாளுக்கு, இது என் பரிசு, நீ தான் முதல் முறையாக இதில் பயணிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.”

எனக்கு சர்வமும் ஆடியது. அத்தை சொன்னதை நான் சரியாகத் தான் கேட்டேனா என திணறியபடியே நான், “ஆஹா! இந்த உயர் தொழில்நுட்பம் உபகரணத்தைப் பற்றி எந்த அறிவும் இல்லாத 9-ம் வகுப்பு பையனான நான் முதலில் முயற்சி செய்ய வேண்டும் என்று நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களா?”

பேராசிரியர் ஆர்த்தி, “நிச்சயமாக, குட்டி. நீ வரலாற்றைப் பற்றி அறிய விரும்பும் ஓர் வரலாறு விரும்பி. என் எண்ணம் சரி என்றால் ஒருவேளை இது நம் நாட்டின் தேசிய இயக்கங்கள் பற்றிய உன் அறிவின் தாகத்தைத் தணிக்கக்கூடும், இதுவே நான் உங்களுக்கு வழங்கும் சிறந்த பரிசு. மேலும், கடந்த கால சுற்றுப்பயணத்தில் நான் உன்னுடன் வருவேன். ஆதலால் நீ பயப்படாமல் இந்த கால இயந்திரத்தில் சவாரி செய்யலாம்.”

ஆர்த்தி அத்தை டைம் மெஷின் கதவைத் திறந்ததும், குளிர்சாதன பெட்டி போன்ற சிறிய ஒன்று எப்படி இரண்டு பேருக்கு இடமளிக்கும் என்று நினைத்தேன்.

அவர்கள் கதவைத் திறந்ததும், உள்ளே ஒரு முழு அறை இருந்தது, அதில் என் உடைமைகள் அனைத்தையும் வைக்கலாம். அந்த அளவு பெரியது. “அடேயப்பா!” என்று நான் அதிர்ச்சியடைந்தேன்.

புதுமையில் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், பயணச் சாதனங்கள் மற்றும் அவசர உதவிக்கான மருந்துகள் என சகலமும் இருந்தன.

“பலே! பலே! அத்தை. இது மிகப் பெரிய சாதனை”, என சொல்லிக்கொண்டே நான் என் அப்பா அம்மாவை பார்த்தேன். அவர்கள் இருவரும் என் பயணத்தை ஆமோதித்தார்கள்.

நானும் ஆர்த்தி அத்தையும் இருக்கைகளில் அமர்ந்து ஸீட் பெல்ட்களை போட்டுக்கொண்டோம், அத்தை கண்ட்ரோல் பொத்தானைகளை சரி செய்து கொண்டார்கள்.

அத்தை என்னைப் பார்த்து, “பொறுமையாய் இரு குட்டி. தொடக்கத்தில் ஒரு மோசமான ஜெர்க் தரலாம். இறுக்கமாய்ப் பிடித்து கொள்.”, என்றார்கள்.

பின் ஒரு பொத்தானை அழுத்தியவுடன், உலகம் தலைகீழாக மாறியது. அடுத்த கணத்தில், முதல் இந்திய சுதந்திர போரில், 1857 புரட்சியை இலக்காகக் கொண்டு நிகழ்காலத்திலிருந்து கடந்த காலவரிசைக்கு தாவிக்கொண்டிருந்தோம்.

புதுமை நின்றது, எங்களைச் சுற்றி ஏராளமான சிறிய கட்டிடங்கள், குடிசைகள் மற்றும் வீடுகள், மாட்டு வண்டிகள், பொதி சுமக்கும் கழுதைகள் என நான் சமீபமாய் பார்த்த மதராசபட்டினம் திரைப்படம் போல இருந்தது எங்கள் சூழல்.

ஆம்! நாங்கள் 1857 இல் இருந்தோம்….