Pudumai
ISBN 9789358782066

Highlights

Notes

  

அத்தியாயம் 4: கீழ்ப்படியாமை இயக்கம் / சட்டமறுப்பு இயக்கம்

புதுமை ஒரு தெருவில் இறங்கியது. அந்த இடமெங்கும் சலசலப்பு காணப்பட்டது. கூச்சலும் இரைச்சலுமாய் இருந்தது.

ஒருவர் தன் கையில் தண்டோரா வைத்து அறிவித்து கொண்டிருந்தார். “அதாகப்பட்டது என்னவென்றால், இனி எவரும் கடலில் இருந்து தாங்களாகவே உப்பை உற்பத்தி செய்யக்கூடாது. இது ராணி துரையம்மாவின் கட்டளை. மேலும், ‘உப்பு வரி’ விதிக்கப்படுகிறது. அனைத்து சாமானியர்களும் வரி செலுத்தி உப்பைப் பெற வேண்டும். இந்த விதியை மீறும் அனைவரும் கடுமையாய் தண்டிக்க படுவர். ஆதலால் மறக்காமல் வரி செலுத்தி உப்பை பெறுங்கள்.”

அதைக் கேட்டதும் ஒருவித வலியை உணர்ந்தேன். என்ன கொடுமை இது! நம் கடல் தாய் உப்பை தருகிறாள். மக்கள் அதை உண்கிறார்கள். இதில் ஆங்கிலேயர்களுக்கு வரியா?

அந்த சமயத்தில் தான் கூட்டத்தில், ஒரு மீனவர் கத்தினார், “இந்த ஆங்கிலேயர்களுக்கு என்ன திணக்கம்? நம்மை நம் அன்னையை கொள்ளையடிக்கிறார்கள்.”

மற்றொரு பெண், “ஏய், உஸ்ஸ்ஷ்! மிகவும் சத்தமாக பேசாதேய்யா. கொன்னுட போறானுங்க!”

“அடச்சீ! அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு நாண்டுக்கிட்டு தொங்கலாம்ய்யா!”

“நாம் பாபுவிடம் சென்று தீர்வு கேட்போம்.”

“ஹா, உன் பாபு சும்மா இருப்பார். நான் பகத்சிங்கிடம் செல்கிறேன், நாம் நியாயம் கேட்போம். இன்குலாப் ஜிந்தாபாத்!”

இந்த காட்சிகள் மனதை பிசைந்தது.

ஒரு குலுக்கல் பிறகு, புதுமை ஒரு ஆசிரமத்தின் வாயிலில் நின்றது..

சுமார் 80 பேர் நீண்ட நடைப்பயணத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர், அவர்களை வழிநடத்தியவர் “மகாத்மா காந்தி!!!” ஆஹா, நமது தேசத்தின் அன்புக்குரிய தந்தை செயலில் இருப்பதைக் காண நான் பாக்கியசாலி!

மகாத்மா காந்தி, முழுப்பெயர் - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அக்டோபர் 2, 1869 அன்று, இந்தியாவின் போர்பந்தரில் பிறந்தார். அவரது கோடி கணக்கான சக இந்தியர்கள் மற்றும் நம்பகமான பின்பற்றுபவர்களின் பார்வையில், காந்திஜி மகாத்மா (பெரிய ஆன்மா) ஆவார். அவரது சுற்றுப்பயணத்தின் வழியெங்கும் அவரைப் பார்க்க கூடியிருந்த பெரும் திரளான மக்களின் வணக்கமும் விசுவாசமும் காந்திஜியின் மீதான மக்களின் ஊக்கத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தியது.

“ஹே ராம்” என்று மகாத்மா உச்சரித்தார். “எந்த உயிருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. நினைவில் கொள்ளுங்கள், நாம் நம் எதிர்ப்பை அமைதியாகக் காட்ட வந்துள்ளோம், வன்முறையாக அல்ல.” என்று சொல்லிக் கொண்டே கையில் தடியுடன் நடக்க ஆரம்பித்தார்.

1930 ஆம் ஆண்டு சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்ட பிறகு கீழ்படியாமை தொடங்கப்பட்டது.

நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை அறிய நான் சுற்றி பார்த்தேன். ஆம், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம். தண்டி நடைபயணம் மேற்கொண்டு ஆசிரமத்தைச் சேர்ந்த 78 பேர் காந்தியுடன் தண்டிக்கு சென்றனர்.

1882 ஆம் ஆண்டின் ஆங்கிலேயஉப்புச் சட்டம், இந்தியா முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உப்பைச் சேகரிக்கவோ அல்லது விற்கவோ இந்தியர்களைத் தடை செய்தது.

இந்திய குடிமக்கள் தங்கள் உப்பை முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் அதிக வரி விதித்தனர். உள்ளூர்வாசிகள் உப்பு வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஏழை எளிய மக்கள் அதிகமான வரியால் பாதிக்கப்பட்டாலும், அனைத்து இந்தியர்களுக்கும் உப்பு தேவைப்பட்டது, எனவே அனைவரும் வரி செலுத்தி உப்பை வாங்க வேண்டியிருந்தது!

முதலில், 1930 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வைஸ்ராய் லார்ட் இர்வினுக்கு காந்தி ஒரு கடிதம் அனுப்பினார், அவரும் இந்தியாவின் ஒன்றுபட்ட குடிமக்களும் 10 நாட்களில் உப்புச் சட்டங்களை மீறத் தொடங்குவார்கள் என்று தெரிவித்தார்.

இந்தியர்கள் உப்பு வரி கட்ட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி தண்டி அணிவகுப்பு தொடங்கியது

தண்டி மார்ச் 12, 1930 முதல் ஏப்ரல் 5, 1930 வரையிலான இருபத்தி நான்கு நாள் நடைப்பயணம். இது வரி எதிர்ப்பின் நேரடி நடவடிக்கை பிரச்சாரமாக, இந்தியர்கள் அனைவரையும் ஊக்குவித்தது. அதே சமயம் ஆங்கிலேயர்களின் உப்பு ஏகபோகத்திற்கு எதிரான வன்முறையற்ற எதிர்ப்பாகவும் அமைந்தது.

சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை வரை சுமார் 390 கி.மீ. வழியெங்கும் காந்தி பெருந்திரளான மக்களுக்குப் பிரசங்கித்தார், ஒவ்வொரு நாளும் உப்புச் சட்டத்தை மீறுவதற்காக உப்புச் சத்தியாகிரகத்திற்கு தானாக முன்வந்து கைகோர்த்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. காந்தி 6 ஏப்ரல் 1930 அன்று காலை 6:30 மணிக்கு ஆங்கிலேயர்களின் உப்பு சட்டங்களை மீறினார்.

காந்தி கீழே இறங்கி சேற்றில் இருந்து ஒரு சிறிய இயற்கை உப்பை எடுத்தபோது மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்ததை நான் பார்க்க முடிந்தது.

ஆனால் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக காந்தி மே 5 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். அவர் இல்லாமல் கூட சத்தியாகிரகம் வெற்றி பெற்றது.

மேலும் பல இந்தியர்கள் அவரது வழியைப் பின்பற்றினர், பம்பாய் மற்றும் கராச்சி உள்ளிட்ட கடலோர நகரங்களில், இந்திய தேசியவாதிகள் மற்றும் போராளிகள் உப்பு தயாரிப்பதில் குடிமக்களின் கூட்டத்தை வழிநடத்தினர். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒரே அடையாளத்தை பின்பற்றினர் - இந்தியர்.

தமிழ்நாட்டில் சி. ராஜகோபாலாச்சாரி கூட திருச்சினோபோலி (இப்போது திருச்சி) முதல் வேதாரண்யம் வரை இதேபோன்ற பேரணியை நடத்தினார்.

சரோஜினி நாயுடு தலைமையில் மே 21 ஆம் தேதி அன்று பம்பாய் நகரங்களில் இருந்து கடற்கரை வரை 2,500 பேரணியாகிய தரசன உப்பு சாலைக்கு சென்றனர். ஆங்கிலேயர் தலைமையிலான இந்தியக் காவலர்கள் எல்லா இடங்களிலும் இருந்தனர்.

“லத்தி சார்ஜ்”

“சக இந்தியர்களே, நம் பாப்புவின் பிரசங்கத்தை நினைவில் கொள்ளுங்கள். நாம் நம் உரிமைகளுக்காக வன்முறையற்ற முறையில் போராட்டம் நடத்துகிறோம். பழிவாங்க வேண்டாம்.”

போலீஸ்காரர்கள் மக்களை கொடூரமாகத் தாக்கினர், வன்முறையற்ற எதிர்ப்பாளர்கள் அமைதியாக இருந்தனர். அவர்களின் இலக்கை நோக்கி கவனம் செலுத்தினர் - எதிர்ப்பே காட்டாமல்.

சைமன் கமிஷன் முன்மொழிந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆங்கிலேய அரசாங்கம் நவம்பர் 1930 இல் லண்டனில் முதல் வட்ட மேசை மாநாட்டை ஏற்பாடு செய்தது. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் அதை புறக்கணித்தது. ஆனால் அதில் இந்திய இளவரசர்கள், முஸ்லீம் லீக், இந்து மகாசபை மற்றும் சில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இருப்பினும், அந்த மாநாட்டில் இருந்து பெரியதாக பயன் ஏதும் வெளிவரவில்லை.

புதுமை மீண்டும் காட்சியை மாற்றியது.

ஆம் நாங்கள் ஒரு அலுவலக அறையில் இருந்தோம்.

ஒரு ஆங்கிலேயர் பேசினார். “எனவே பாபு - மிஸ்டர் காந்தியின் ஆதரவு இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது! Shucks!”.

“ஆமாம் ஐயா! காங்கிரஸின் உதவியின்றி இந்தியாவில் அரசியலமைப்பு மாற்றங்களைச் செயல்படுத்துவது குறித்த நம் முடிவுகளை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”

“காங்கிரஸ்!!” பல்லை கடித்தார் அந்த ஆங்கிலேயர்.

“ம்ச்! வேறு வழி தென்படவில்லை. திரு.காந்தியை விடுவிக்க முடியுமா?”

“ஆனால், ‘அகிம்சை’ என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் நம் இயந்திரத் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.”

ஆங்கிலேய அதிகாரிகள் நிறைந்திருந்த அந்த அறையில் இந்த உரையாடலைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். எத்துணை கொடுமையான கீழ்த்தரமான செயல்கள்!

காந்தி ஜனவரி 1931 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலையானதும், இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபுவைச் சந்தித்து, பின்பு நடக்கவிருந்த லண்டன் மாநாட்டில் இந்தியாவிற்காக பக்கச்சார்பற்ற பேச்சுவார்த்தை கோரினார். இதற்கு ஈடாக சத்தியாக்கிரகத்தைக் கைவிடுவதற்கான திட்டத்தை சொன்னார்.

புதுமை மீண்டும் எங்கள் காட்சியை மாற்றியது.

“இனி ‘அந்நிய பொருட்கள் வேண்டாம்'. நம் ‘சுதேசி’ மட்டுமே.”

வெளிநாட்டுப் பொருட்களை மக்கள் கூட்டம் கூட்டமாக நாடு முழுவதும் எரித்தனர். என் இதயம் பெருமிதத்தால் பொங்கியது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் போராடும் துணிவு இந்தியர்களுக்கு இருந்தது. இந்தியா முழுவதும், ஆங்கிலேயர்களால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் எரிக்கப்பட்டு, இந்திய, தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்த தொடங்கினர் மக்கள். இதனால் நம் தயாரிப்புகளின் உற்பத்தி பெருகியது.

புதுமை மீண்டும் காட்சியை மாற்றியது.

அது லாகூர் - அப்போதைய இந்தியாவின் ஒரு பகுதி.

“சைமன் - வெளியேறு”

கறுப்புக் கொடிகளை நெஞ்சில் கட்டிக் கொண்டு கோபமடைந்த மக்கள் கும்பலைப் பார்த்தோம். கோஷங்கள் ஒன்றே ஒன்றுதான்.

“சைமன் - டவுன் டவுன்”

“சைமன் வெளியேறு”

கோபமடைந்த மக்களின் உரையாடலைக் கேட்க முடிந்தது.

“ரவி அண்ணா, இந்த சைமன் பையல் எப்போ வருவான்?”

“அந்த பையல் இந்நேரம் இங்கு வந்திருக்க வேண்டும். இன்னும் ஆளை காணலை. வரட்டும் ஒரு கை பார்த்துடுவோம்”

“ஆனால் அண்ணா, எனக்குப் புரியவில்லை, இந்தியர்களின் நலனுக்காக நடத்தப்படும் ‘சைமன் கமிஷன்’ என்று சொன்னார்கள். ஏன் அதில் நம்மில் ஒருவர் இல்லை?”

“உண்மைதான் ராஜு. இந்த கொடும்பாவிகள் இவனுங்களே ஒரு குழுவை உருவாக்கி, இவனுங்களே முடிவெடுப்பங்களாம். அந்த முடிவு நமக்கு சாதகமாய் அமையுமாம்! கிரகத்த!”

கரசாரமாய் பேசிக்கொண்டு இருந்தவர்களை நான் கவனித்தேன்.

திடீரென ஒரு சத்தம் - கோஷம் - பெருமிதம் நிறைந்த கூக்குரல்கள். இவை வரும் திசையை நான் பார்த்தேன்.

“இதோ வருகிறது எங்கள் பஞ்சாப் கேசரி - லாலா லஜபதி ராய்”.

அந்த மனிதர் சுட்டிக்காட்டிய திசையைப் பார்த்தேன். பஞ்சாப் கேசரி - பஞ்சாப் டா ஷேர், லாலா லஜபதி ராய்.

சைமன் கமிஷன் சர் ஜான் சைமன் தலைமையில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்காக 1928 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவிற்கு இந்த ஆணையம் வந்தது. புதிய மற்றும் வலுவான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவின் அரசியலமைப்பு முன்னேற்றத்தைச் சமர்ப்பிப்பதற்காக சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு இந்திய உறுப்பினரும் இல்லாத காரணமாக, இந்தியர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அந்த குழுவின் உறுப்பினர்களை உடனடியாக போராளிகள் ஆர்பாட்டமாய் எதிர்கொண்டனர். வேலைநிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பலர் கறுப்புக் கொடிகளுடன் கமிஷன் மறுப்பை வெளிப்படுத்தினர். ஆங்கிலேய அரசியல்வாதிகளும் தலைமைகளும் இருந்த பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பெரும்பாலான முக்கிய இந்திய நகரங்களில் இதே போன்ற போராட்டங்கள் நடந்தன.

30 அக்டோபர் 1928 அன்று கமிஷன் லாகூருக்கு வந்தபோது, கறுப்புக் கொடிகளை ஏந்திய எதிர்ப்பாளர்கள் அதை எதிர்த்தனர். இந்திய தேசியவாதியான லாலா லஜபதி ராய் தலைமையில், பிப்ரவரி 1928 இல் பஞ்சாப் சட்டமன்றத்தில் கமிஷனுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்.

“லத்தி சார்ஜ்”

“சைமன் கமிஷன் குழுவை எதிர்க்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் அடித்துக் கொல்லப்படுவீர்கள்”

இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேட்க முடிந்தது. லாலா லஜபதிராய் அவர்களை உள்ளூர் காவல்துறை ஆட்கள் மரண அடி அடிப்பதை நான் நேரில் பார்த்தேன்.

எங்கும் இரத்தம். எதிலும் இரத்தம். வலியின் கூக்குரல்கள். எனக்கு அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. கேவி கேவி அழ தொடங்கினேன். அத்தை என் கையைப் பிடித்து சமாதான படுத்தினார்.

பஞ்சாப் டா ஷேர் ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு இறந்ததை எனது வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து நினைவு கூர்ந்தேன்.

இந்தியாவின் எதிர்கால நலனுக்காக உருவாக்கப்பட்ட சைமன் கமிஷனில் ஒரு இந்திய உறுப்பினரைக் கூட சேர்க்கவில்லை என்று பெரும்பான்மையான இந்திய குடிமக்கள் ஒருமனதாக கோபமடைந்து அவமானப்படுத்தினர். இந்திய தேசிய காங்கிரஸ் கமிஷனை புறக்கணிக்க ஒப்புக்கொண்டது. இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் அவர்களின் தாய்நாட்டின் எதிர்காலத்தை நவீனமயமாக்கும் அரசியலமைப்பை உருவாக்குமாறு இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளரான லார்ட் பிர்கன்ஹெட்க்கு சவால் விடுத்தது. முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் மற்றும் முகமது அலி ஜின்னா தலைமையிலான பல முஸ்லிம்கள் கமிஷனைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தனர்.

படித்த இந்தியர்கள் ஆணையத்தை எதிர்த்தனர். எனவே ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவின் அரசியலமைப்புச் சிக்கல்கள் மற்றும் பிளவுகளைக் கையாள்வதற்கான மற்றொரு முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலக நாடுகளுக்கு செய்திகள் வெளிவருவதற்கு முன், ஆங்கிலேய அரசாங்கம் இந்தியக் கருத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசியலமைப்பு செயல்முறையின் இயல்பான விளைவு இந்தியாவிற்கு ஆதிக்க அந்தஸ்து என்றும் கூறியது.

சைமன் கமிஷனின் விளைவு 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை உருவாக்கியது. இது இந்தியாவில் ஒரு மாகாண மட்டத்தில் ஒரு அரசாங்கத்தை கொண்டு வர முன்மொழியப்பட்டது, ஆனால் தேசிய நிர்வாகத்தில் அல்ல. இது இந்திய அரசியலமைப்பின் பல பகுதிகளின் மூல ஆதாரமாகும். ஜனவரி 1931 இல் மாகாணங்களில் முதல் தேர்தல்கள் நடத்தப்பட்டன, இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களிலும் ஆட்சியைப் பிடித்தன.

இது ஒரு உற்சாகமான அனுபவம்!! எனக்கு இதை நேரில் பார்க்க பார்க்க தெவிட்ட வில்லை. என்னைப் பொறுத்தவரை, வரலாற்றை படிப்பதன் மூலம் நமக்கு அறிவுடன் சேர்ந்து இன்பம் கிட்டும்.

அத்தை “H” என்ற பொத்தானை க்ளிக் செய்தார்கள், நாங்கள் வீட்டிற்கு செல்லும் நேரம் வந்தது.

இந்த பயணத்தை நான் மிகவும் ரசித்தேன். எனக்குள் சூளுரைத்தேன், “இத்துணை தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது என் கடமை.”